கன்னியாகுமரி ஜூலை 6
குமரி மாவட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து திடீரென 3 மணி நேரத்திற்கும் மேல் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் அறிவிக்கப்படாத போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், பொதுமக்கள் அவதி.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் குழித்துறை 1 மற்றும் 2 பணிமனைகள் படந்தாலூமூடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பணிமனைகளில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகள் மற்றும் நகரப்பகுதகிளுக்கு சுமார் 130 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை நம்பி தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதோடு, ஏற்கனவே 8 மணி நேரம் வேலை செய்த பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் இதே பணிமனையில் வேலைக்கு அமர்த்தவும், 12 மணி நேர வேலையை மீண்டும் 8 மணி நேரமாக மாற்றித் தரக்கோரி பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீஸார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களிடம் போக்குவரத்து தொழிலாளர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணிமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் 3 மணி நேரம் காத்திருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.