போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன் மற்றும் முத்துராமலிங்கம் ஆலோசனை வழங்கினர்
போகலூர், அக்.16-
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கண்மாய்கள் குளங்கள் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி தேவையான முன்னேற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
போகலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் வருவாய் துறை, காவல்துறை, சுகாதார துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறை அலுவலர்களை வரவழைத்து வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும்
வடகிழக்கு மருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை உரிய படிவங்களில் தினமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த, துறையின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் TN SMART Mobile app-ஐ அவர்களது செல்லிடைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும், அனைத்து துறையினரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.
இதுதவிர
வைகை ஆற்றின் ஓரம் உள்ள கிராம ஊராட்சிகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
அத்துடன்
அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, வழியோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை துார்வாரிட வேண்டும். கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலும், சிறு பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று போகலூர் ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் மணிவண்ணன் கூறினார்.
கூட்டத்தில் மேலாளர் ராஜு உட்பட ஊராட்சி ஒன்றியம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இது ஒரு புறம் இருக்க
ஊராட்சி ஒன்றிய சேர்மன் சத்யா குணசேகரன் துணை சேர்மன் பூமிநாதன் ஆகியோர் போகலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மழை நீரால் பாதிக்கப்படும் என்று கண்டறியபட்ட ஊர்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டு அந்த பகுதியில் எந்த நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.
தற்போது ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
ஒவ்வொரு ஊராட்சி தலைவர்கள் செயலாளர்களிடமும் பாதுகாப்பை உறுதி செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.