நீலகிரி. நவ.30.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தாவரவியல் துறை ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு மற்றும் இயற்கை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஷீலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது கூறிய கருத்துக்களாவன –
உலக அளவிலான காலநிலை மாற்றம் கருத்தரங்கு அண்மையில் அசர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் நடந்து முடிந்தது. இந்த 29 ஆவது கோப் மகாநாடு மீண்டும் ஒரு பயனற்ற மாநாடாக நடந்து முடிந்தது. காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தக்கூடிய எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. உலக அளவில் அதிக அளவு கார்பன்களை வெளிப்படுத்தும் வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியீட்டுக்கு விலையாக வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகை கொடுக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏராளமான சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் வளர்ந்த நாடுகள் ‘கார்பன் நிதி’யாக நூறு ட்ரில்லியன் டாலர்கள் நிதி வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. இந்த நிதியை வைத்துக்கொண்டு ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நாடுகளில் கால நிலை மாற்றத்த தடுத்து நிறுத்தும் வகையில் காடுகளை உண்டாக்குதல் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் அதற்குண்டான தொழில்நுட்பங்களை வழங்குதல் போன்ற நிகழ்வுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளோ 10 பில்லியன் டாலர்கள் மட்டுமே வழங்க முடியும் என அறிவித்துள்ளன. அதாவது இந்தத் தொகை 100 ரூபாய் கேட்டால் 10 பைசா தருவதற்கு இணையானது. ஆக மொத்தம் இந்த 29ஆவது உலக சுற்றுச்சூழல் மகாநாடு மீண்டும் ஒரு தோல்வியை தழுவியது என்றே கூறலாம். பணக்கார நாடுகள் தங்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ள எவ்விதமான ஆர்வமும் காட்டவில்லை. பல தீவு நாடுகள் உங்கள் ஆடம்பரத்திற்காக நாங்கள் சாக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. கடந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பஞ்சாமிர்தம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டத்தின் படி உலக அளவில் அதிக கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுத்தும் மூன்றாவது நாடான இந்தியா 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற நிலையை எட்டி விடும் என உறுதி அளித்தார். ஆனால் இந்திய அரசு இதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நவீன அறிவியல் காலநிலை மாற்றத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி கார்பன் டை ஆக்சைடை வெளிப்படுத்தும் இடத்திலேயே தேக்கி வைப்பது, அந்த கார்பன் டை ஆக்சைடை ஆக்கபூர்வமாக உற்பத்தி செயல்களுக்கு பயன்படுத்துதல், கார்பன் டை ஆக்சைடு வாயுவை கார்பன் ஆகவும் ஆக்சிஜனாகவும் பிரித்தல் போன்ற பல புதிய திட்டங்களை அறிவித்துள்ள போதிலும் அதற்கான நிதி கிடைக்காத வரையில் எதுவும் நடைபெறப் போவதில்லை. இந்த கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தி வைரங்களையும் உற்பத்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இனி இந்த பூமியை காக்க என்ன வழி என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். காலநிலை மாற்றம் என்ற கருத்தை ஜெர்மனியில் நடைபெற்றது போல அரசியல் விழிப்புணர்வாக மாற வேண்டும். ஜெர்மனியில் சுற்றுச்சூழல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதுபோல உலகெங்கிலும் சுற்றுச்சூழல் கட்சிகள் ஆட்சி செய்தால்தான் இந்த பூமிக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரேட்டா துன்பர்க் என்ற மாணவி உலகத் தலைவர்களை நோக்கி பூமி அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் என்ன பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டு உலக அளவில் பிரபலமானவர். அவருடைய கேள்விக்கு இந்த மனித சமுதாயம் எப்பொழுது பதிலளிக்கும் என்பதுதான் நம் அனைவரின் முன் உள்ள கேள்வி. என்பதைப் போன்ற பல செய்திகளை கூறினார். இந்த நிகழ்வினை ஒட்டி கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான செயல்பாடுகள் துவக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பழ மரங்களை நட்டனர். முன்னதாக தாவரவியல் துறை தலைவர் முனைவர் ரோஸ்பி லீமா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி அலுவலர்கள் குமார், ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.