அரியலூர், அக்;05
அரியலூர் மாவட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், ஓட்டக்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஓட்டக்கோவில் முதல் சாலையக்குறிச்சி சாலை உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி, செந்துறை வட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.56 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரியலூர்-ஜெயங்கொண்டம்-செந்துறை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி மற்றும் செந்துறை வட்டம், அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவு, செந்துறை ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செந்துறை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி, செந்துறை ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பெரிய ஏரி ஓடையில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
செந்துறை ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி (தரிசு நிலம் தொகுப்பு) திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு தூய மல்லி பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியதோடு, திட்டத்தின் கீழ் பயிரிட்ட பலவகை பயிர்களின் தனித்துவம் குறித்தும், விவசாயிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, செயற்பொறியாளர் (கட்டிடடங்கள்) திருவருள், வேளாண் இணை இயக்குநர் கணேசன் (பொ) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்