ஈரோடு பிப் 2 1
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முதன்மைச் செயலாளர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண்மை அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் விபரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை கேட்டறிந்து, வருகின்ற கோடை காலத்தில் சீரான குடிநீரினை வழங்க அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிநீர் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பணி ஆணை வழங்கப்பட்டு முழுமையாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவியர்களின் நடப்பாண்டு பருவத்தேர்வு முடிவுகள், பள்ளி உட்கட்டமைப்பு, உயர்தர ஆய்வகம், பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் விபரங்களை கேட்டறிந்தார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு அட்டணைப்படி சத்தாகவும், உரிய நேரத்திலும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா என கேட்டறிந்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.