சென்னை நவ 03 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசு, மாநில மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்றும் தொடர் நடவடிக்கையை கைவிட வேண்டும்
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல.
குறிப்பாக சொத்து வரி, தண்ணீர் வரி பத்திரப் பதிவு ஆகியவற்றில் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தி மக்களை சிரமத்திற்கு உட்படுத்திய தமிழக அரசு இப்போது 10 மடங்கு முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அதாவது செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக்கட்டணத்தை ரூ. 10,000 -ம் ஆகவும் முத்திரைத் தீர்வுக்கான கட்டணத்தை ரூ.40,000-ம் ஆகவும் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணத்தை ரூ. 10,000 ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் 20 ரூபாய் பத்திரம் செல்லாது என்பதாலும் குறைந்த பட்சம் ரூ. 200 கொண்ட முத்திரைத்தாள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதாலும்
20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் வீடு, நிலம் வாங்கும் போது, வீடு கட்டுமான ஒப்பந்தம் குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்யும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
அது மட்டுமல்ல ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில் தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும்
முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.