தேனி மாவட்டம், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் ஆண்டிபட்டி வட்டத்தில்-43, பெரியகுளம் வட்டத்தில்-37, தேனி வட்டத்தில்-14, உத்தமபாளையம் வட்டத்தில்-45, போடிநாயக்கனூர் வட்டத்தில்-23 என மொத்தம் 162 அரசு புறம்போக்கு ஊரணி, குளம், மற்றும் கண்மாய்கள் உள்ளன. அவற்றிலிருந்து விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt) ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் ஊரணி, குளம், மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் குளம், ஏரி, கண்மாய் போன்ற நீர் நிலைகள், விண்ணப்பதாரரின் மண்பாண்டத் தொழில் செய்யும் இடம் அல்லது விவசாய நிலம் மற்றும் வசிப்பிடம் ஆகியவை ஒரே வருவாய் வட்டத்திற்குள் (Same Taluk) அமைந்திருந்தால் மட்டுமே மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.