கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின்போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும், தென்காசி மாவட்டத்தின் தலைவருமான மருத்துவர் ஜெஸ்லின் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழகம் குற்றாலக் கிளையின் தலைவர் பார்வதி சங்கர் முன்னிலை வகித்தார். இன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் வெளிநாடுகள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், அரசு மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்கள்,தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் என சுமார் 200 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த மாணவிக்கு நீதி வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் நீதி பேரணி நடைபெற்றது. பேரணியில் உயிரிழந்த மாணவிக்கு நீதிவேண்டியும், மற்றும் தேசிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.