நாகர்கோவில் செப் 25
குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “குமரி மாவட்டம், சுசீந்திரம் கடைக்கிராமம் அக்கரை பகுதியில் ஆதி திராவிட பழங்குடியின அரசு மாணவிகள் விடுதி உள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 50க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவிகள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், இந்த விடுதிக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த நிதியை மாவட்ட ஆதி திராவிடர் அலுவலகம் இந்த விடுதிக்கு ஒதுக்குகிறதா என்பதிலேயே அங்கிருந்து வரும் செய்திகளால் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடுதியில் உள்ள சமையல் கூடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு பசுமையான காய்கறிகளுக்குப் பதிலாக, சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் அழுகிய காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகிறது. ஒருவேளை ஏழை தலித் மாணவிகள் தானே என்னும் மெத்தனம் இதற்குக் காரணமா எனவும் சந்தேகம் எழுகிறது. மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்களும், வண்டுகளும் மிதப்பதும், அதை சாப்பிடும் மாணவிகள் ஒவ்வாமையால் அவதிப்படுவதும் விடுதியில் தொடர்ந்து வருகிறது.
இதை விடக் கொடுமை என்னவென்றால், பள்ளி, கல்லூரியில் பாடம் பயில சென்று வரும் மாணவிகள் விடுதிக்கு வந்ததும் அவர்களை காய்கறி வெட்டச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் விடுதி ஊழியர்கள் கொடுமை செய்வதும் தொடர்கிறது. அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி தொடங்கி மளிகைப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிச் சந்தையில் விற்றுவிட்டு, விலை மலிவான பொருட்களைக் கொண்டு சமையல் நடப்பதும் தெரிகிறது.
அதே போல், இங்கு தங்கியிருக்கும் மாணவிகளைத் தேடி அவர்களது பெற்றோர்கள் வந்தாலும் , விடுதிக்குள் அவர்களை சந்திக்க உள்ளே அனுமதிப்பது இல்லை. மொத்தத்தில் அது ஒரு சித்ரவதை கூடம் போல் செயல்படுகிறது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் அரசு மாணவிகள் விடுதியில் உள்ள குறைகளை போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இதன் பின்னரும், மாணவிகளின் பிரச்னைகள் உரிய முறையில் சீர் செய்யப்படாவிட்டால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகையிடப்படும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.