நாகர்கோவில் மே 27
தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி நடவடிக்கைளில் ஈடுபட்டு உள்ளனர்.
இது சம்பந்தமாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் தலைமையில் ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ரெளடிகளை தொடா்ந்து கண்காணித்து குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில், தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் யாங் சென் டோமா பூட்டியா, தக்கலை மற்றும் கன்னியாகுமரி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள், அனைத்து தனிப்படை அதிகாரிகள், தனிப்பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பூதப்பாண்டி, வடசேரி காவல் சரகத்துக்குள்பட்ட 2 ரெளடிகளை கைது செய்தனர். இதை போல் தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் உட்கோட்டங்களுக்குள்பட்ட 6 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.
மேலும்
நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிஷன்களில் தீவிர வாகன சோதனை,ரவடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களில் இந்த தனிப்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முதல் நாளில் 8 பேரும், நேற்று 9 பேரும் என 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடா்ந்து போலீஸாா் ரெளடிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் ரவுடிகள் கலக்கமடைந்துள்ளனர் பல ரவுடிகள் வெளி மாவட்டங்களுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றமில்லா குமரியை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.