கரூர் மாவட்டம் – செப்டம்பர்- 4
கரூர் மாவட்டத்தில் 10 லட்சம் விதைகள் நடவு செய்யும் திட்டத்திற்கு குரும்பப்பட்டியில் பனை விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி காவிரி கரையோர பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்காக பனை விதைகள் மாவட்டம் முழுவதும் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கடவூர் வட்டம், வாழ விடுதி ஊராட்சி குரும்பப்பட்டியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியினை கலெக்டர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் தலைமையில் தொடங்கியது.
செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுக்க பனை விதைகள் சேகரிப்பும், அவற்றைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம் ,நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையின் இரு பக்கங்களிலும் 416 கிலோமீட்டர் தொலைவிற்கு நடக்க உள்ளது.
இதேபோன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர் நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இதில் ஒரு லட்சம் பேர் (தன்னார்வலர்கள், மாணவர்கள் ,சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்) பங்கேற்று பனை விதைகளில் நடுகின்றனர்.
இதில் பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவிகள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு கோடி பண விதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் கரூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கடவூர் தாசில்தார் இளம்பருதி, பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.