திருப்பத்தூர்:டிச:17, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன ராச்சமங்களம் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சின்ன ராச்சமங்களம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் , 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் செல்ல முடிவதில்லை. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனம் ஓட்டி செல்வதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் பெரும் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். பல முறை சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேட்டியின்போது கூறினர். பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருபதுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.