நாகர்கோவில் ஜன 21
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அதில்,கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட பூதப்பாண்டியில் அமைந்துள்ள உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முதலில் 1998 டிசம்பர் 17 லிருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக 2005 வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது .அதன்பின்பு அரசுக்கு சொந்தமான பழமையான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு 2012 மே மாதத்திலிருந்து உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றமாக மாற்றப்பட்டு தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான உரிமையியல் வழக்குகளும் மற்றும் பூதப்பாண்டி,கீரிப்பாறை,ஆரலவாய்மொழி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகளையும் நடத்தி மக்களுக்கும் அரசுக்கும் சேவையாற்றி வருகிறது 2016ல் இருந்து பூதப்பாண்டி நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அரசு தரப்பிற்கான வழக்குகளையும் நடத்தி செவ்வனே செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இயங்கி வரும் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான ஓய்வு அறை, வழக்கறிஞர்களுக்கான அறை, நீதிமன்ற ஆவணங்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அறை, தனி அலுவலக அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்போதைய நீதிமன்றம் இயங்கி வருகிறது .
அதனை கருத்தில் கொண்டு பூதப்பாண்டி நீதிமன்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றும் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் இணங்க பூதப்பாண்டில் இருந்து திட்டுவிளை செல்லும் வழியில் தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு புதிய நீதிமன்றத்திற்கான கட்டுமான பணியை ஆரம்பித்து கட்டுமான பணிகள் அனைத்தையும் முடித்த பின்பும் இன்று வரை புதிய நீதிமன்ற கட்டிடம் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது.
கட்டிடத்தின் வெளிப்புறத்தில் செடி கொடி புதர்களாக மாரி நீதிமன்ற வளாகத்தினுள் ஆடு மாடுகள் மேய்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலைமை நீடித்தால் நீதிமன்றம் ஆனது அதன் பயன்பாட்டை அடையாமல் பாழடைந்து மீண்டும் அதற்கு பழுது பார்க்க மக்களின் வரிப்பணமான அரசு தொகையை ஒதுக்கீடு செய்யும் நிலைமை ஏற்படும்.
எனவே பூதப்பாண்டியில் உள்ள உரிமைகள் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், பொருளாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்,செய்தி தொடர்பாளர் விஜேஷ் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.