கிருஷ்ணகிரி ஆக 16:
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிக்கானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் கட்டிக்கானபள்ளி மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் முக்கிய பிரச்சனையான கிருஷ்ணகிரி நகராட்சியில் கட்டிக்கானபள்ளி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு கட்டிக்கானபள்ளி ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுபோன்று இணைத்தால் பஞ்சாயத்து மூலமாக விவசாய நிலங்களில் மண் கரை அமைத்தல், மாமரங்கள் தென்னை மரங்களுக்கு களை எடுப்பது, பாத்தி கட்டுவது, பண்ண குட்டைகள் அமைப்பது, விலை நிலங்களுக்கு நீர் தேக்கி கொடுப்பது, போன்ற வேலைகளால் அரசாங்கம் மூலமாக பயன் பெற்று வருவதாகவும், மேலும் கிராமம் நகராட்சிக்கு மாற்றினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கிராமத்திற்கு கிடைக்கும் வரி விளக்கு கிடைக்காமல் போய் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், வேதனை தெரிவித்தனர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.காயத்ரி தேவி கோவிந்தராஜிடம் மனு அளித்தனர். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்துவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்விபாஸ்கர், ஊராட்சி செயலர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் சத்ய நாராயண ராவ், ஒன்றிய குழு உறுப்பினர் மாதம்மாள் சீனிவாசன், வார்டு உறுப்பினர்களான சரவணன், சிவசங்கர், பால்ராஜ், முனிரத்தினம், சாந்தா, மேரூன், கோவிந்தராஜ், தேன்மொழி, பேபிராணி, ராமச்சந்திரன், சுபத்திரை, ஜெயலட்சுமி, மாதேஷ், சந்திரவதி உள்ளிட்ட கட்டிக்கானபள்ளி ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், மற்றும் பிற துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.