கிருஷ்ணகிரி டிச 24: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும் என கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, கல்லாவி, போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் காலியாக உள்ள, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் காலி இடங்களுக்கு, அரசு அறிவிப்பின் படி கடந்த பிப்.,4ல் நடந்த தேர்வில் கலந்து கொண்டோம். தொடர்ந்து கடந்த, மே மாதம் வெளியிடப்பட்ட முடிவுகளில் தேர்ச்சி பெற்றோம். ஜூன் மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டு, ஆகஸ்டில் வெளியிடப்பட்ட உத்தேச தேர்வு பட்டியலிலும் இடம் பெற்றோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, 59 பேர் உத்தேச தேர்வு பட்டியலில் இடம்பெற்றும், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் கலந்தாய்வு நடக்கவில்லை. எங்களுடன் தேர்ச்சி பெற்று, ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் மட்டும் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களை நிரப்ப கடந்த, 10 ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடந்தது.
அதை நம்பி தனியார் பள்ளிகளில் பார்த்த வேலையை விட்டுவிட்டு படித்தோம். தற்போது அரையாண்டு தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளியில் மீண்டும் பணியில் சேர முடியாத நிலை உள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வை உடனே நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.