கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 29
கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
கலெக்டர் மீ.தங்கவேல் தகவல்…
கரூர் மாவட்டத்தில் 42 நீர் நிலைகளில் 26,894 கன மீட்டர் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரியில் கலெக்டர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் தற்போது 42 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் போன்றவற்றை வெட்டியெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவைகளாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசுகளின் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அரசாணைகளில் தெரிவித்துள்ளபடி, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் போன்றவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றிற்கு நன்செய் நிலமெனில் 75 கன மீட்டர் அதாவது 25 டிராக்டர் லோடுகள் மற்றும் புன்செய் நிலமனில் 90 கன மீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகள் என்ற கணக்கீட்டின்படியும், மண்பாண்ட தொழிலுக்கு நபர் ஒன்றுக்கு 60 கன மீட்டர் அதாவது 20 டிராக்டர் லோடுகள் வீதமும் இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல 30 நாட்களுக்கு
மிகாமல் சில நிபந்தனைக்களுக்குட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுப் வருகிறது.
விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல விரும்பும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள இ- சேவை மையங்களில் தொடர்புடைய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல 26,894 கன மீட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தற்பொழுது வரை 67 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்கின்றனர். மீதமுள்ள விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் வண்டல் மண் எடுக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 42 நீர் நிலைகள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார். தோகைமலை நாகனூர், கல்லடை, வடசேரி, காவல்காரன்பட்டி, ராச்சாண்டார் திருமலை உள்ளிட்ட இடங்களில் ரூ.1.66 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முகமது திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன்உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.