நீலகிரி. நவ.25.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் தொடங்கி நவம்பர், டிசம்பர் வரை பனி தாக்கம் அதிகமாக இருக்கும். நவம்பர் 15க்கு பின்பு உறைபனி அதிகமாக கொட்டும் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் கோத்தகிரி பகுதிகளில் மேகமூட்டமும் இரவில் அதிகமான நீர்பனியும் பொழிகிறது. ஒரு சில நாட்களில் பகல் நேரங்களில் மேகமூட்டம் காணப்படுகிறது. உறைபனியும், நீர்பனியும் மாறி மாறி நிலவும் காலநிலையால் கோத்தகிரி கோடநாடு மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது 5டிகிரிக்கும் கீழ் குளிர் நிலவுவதால் காய்கறி தோட்டங்கள், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். புல்வெளிகளில் முத்துக்களை பரப்பியதைப் போல உறைபனியும் உப்பை இரைத்தார் போல் உறை பனியும் காலை நேரங்களில் காட்சியளிக்கிறது. அதிகமான பனிப்பொழிவால் உருளைக்கிழங்கு மற்றும் தேயிலை செடிகளில் நோய் தாக்கி அழுகல் நோய் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவு குளிர்ச்சி தன்மையும் நிலவுகிறது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கத்திலிருந்து தேயிலைச் செடிகளை பாதுகாக்கவும், மலை காய்கறி பயிர்களை பாதுகாக்கவும் விவசாயிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையமும் அறிவித்துள்ளது.