தென்தாமரைகுளம், அக். 19-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மாணவன் ஒருவனை பள்ளி தலைமை ஆசிரியர் மர ஸ்கேலால் தாக்கியதாக கூறி மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.
இதற்கு பள்ளி தலைமையாசிரியர் முறையான பதில் அளிக்கவில்லை எனகூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சார்ந்த மேலும் சில பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர்.
இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த தென்தாமரைகுளம் போலீசார் மற்றும் கல்வி அலுவலர் அமுதவல்லி பள்ளி முன்பு திரண்டிருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் அங்கு ஆசிரியையாக பணிபுரியும் அவரது மனைவி மீதும் பல்வேறு புகார்களை கூறினர்.மேலும் அவர்களை உடனடியாக இங்கிருந்து இடமாற்றம் செய்யவேண்டும்
எனவும் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன்படி பள்ளி தலைமையாசிரியர் மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர் கூறியதை அடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.