ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா :-
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் 51-வது பெற்றோர் தினவிழா இராஜகோபாலன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று இனிய பாடல் பாடினர். பரதமும், ஒடிசியும் இணைந்த மாணவிகளின் நடனம் விழாவிற்கு மெருகூட்டியது. இயற்கையை நேசிக்க வேண்டும் என்னும் கருத்தைச் சின்னஞ்சிறார்கள் நாடக வடிவில் நடித்துக் காட்டினர்.
நாம் நேர்மறை சிந்தையோடு வாழ வேண்டும் என்பதை ஆங்கில நாடகத்தின் மூலம் அழகாக விளக்கினர். பெரியோரின் அறிவுரையில் இருக்கும் ஆழ்ந்த கருத்தையும், இன்றைய மாணவர்களின் மனநிலையையும் தமிழ் நாடகக் குழுவினர் நடித்துக் காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது. “இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்” என்னும் கருத்தை வலியுறுத்தும் நடனமும் தன்னம்பிக்கை தரும் வகையில் அமைந்த நடனமும், மேற்கத்திய நடனமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும் கல்வியிலும் கலையிலும் சிறந்த மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பரிசு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில், பள்ளித்தலைவர் பாலு, பள்ளிச் செயலர் பிரேம் சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.