நாகர்கோவில் ஏப் 14
குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறுவதாகும்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் பேராயர் நசேரன் சூசை தலைமையில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து குருத்தோலை திருப்பலியும் நடைபெற்றது. இதில் ஆலய பங்கு நிர்வாகிகள், சபை மக்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை பவனியாக சென்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த மார்ச் 5 ஆம் தேதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.தவக்காலத்தின் இறுதி ஞாயிறாகவும், புனித வாரத்தின் தொடக்க ஞாயிறாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து மக்களுக்காக பாடுகளை ஏற்று மனுக்குலத்தை மீட்பதற்காக அரசருக்குரிய மரியாதையுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்ததை இந்த பவனி நினைவூட்டுகிறது.
இந்த குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன? என்பது குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம். வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும் பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். மேலும் இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர். இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததினால் தான் மக்கள் பிதாவை பார்த்து வேண்டிக்கொள்ளும் வார்த்தையாகவும், பிதாவே இயேசுவை இந்த சிலுவை பாடுகளில் இருந்து விடுவியும் என்றும் சொல்வதைத் தான் ஓசன்னா என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் இயேசுவானவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய வாரம் நடைபெறுகிறது.
அந்த நாட்களில் எருசலேம் மக்கள் ஒலிவமலை குருத்து இலைகளை கையில் ஏந்தி இயேசுவை வரவேற்றது போல, (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பனையில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து அதை சிலுவையாக வடிவமைத்து கைகளில் ஏந்தியபடி, அவரை புகழ்ந்து பாடல்களை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று இயேசுவை நினைவுகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது. இந்த நாட்களில் 18 ஆம் தேதி புனிதவெள்ளி மும்மணி பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகையையொட்டி கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலியும், தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளன.