தஞ்சாவூர். ஏப்ரல் 16 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், அவர்களின் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஓவியக்கலைக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சித்திரை சந்தை எனும் ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு 12.04.2025 முதல் 14.04.2025 வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தலைசிறந்த ஓவியர்கள் முதல் வளர்ந்து வரும் கலைஞர்கள் வரை 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வண்ண ஓவியங்கள், அழகிய சிற்பங்கள், கணினி ஓவியங்கள் என 1000 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தி யிருந்தனர். பல்வேறு ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதில் பார்வையாளர்களை ஒரு சில ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்து அவர்களது ஓவியத்தை கொடுத்தது அனைவருக்கும் மிகுந்த உற்சாகமாக அமைந்தது.
மேலும், சந்தையின் சிறப்பம்சமாக, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிக்க ஓவியப் போட்டி, காட்சிக்கலைப் போட்டி, ஓவியப் பயிலரங்கம், ஓவியப் பேச்சரங்கம், ஓவியப் பிரதிமை, சிற்ப வடிவமைப்பு , சுவர் ஓவியங்கள் மற்றும் பல கலாசார நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
நிறைவு நாளில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் . பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து படைப்புகளையும் பார்வையிட்டு படைப்பாளிகளை பாராட்டினார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி. கீர்த்தனா முதல் பரிசும், கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி. தேவ யாழினி இரண்டாம் பரிசும் மார்னிங் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன். அஸ்வின் ராஜா மூன்றாம் பரிசும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவி செல்வி. ரோஷினி முதல் பரிசும், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர் செல்வன். கணேஷ் குமார் இரண்டாம் பரிசும் அழகப்பா பல்கலைக்கழக மாணவர் செல்வன். நிகரன் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு தியாகராஜன் தஞ்சாவூர் வட்டாட்சியர் திரு சிவகுமார், சத்திரம் வட்டாட்சியர் திரு. சக்திவேல், மேற்கு காவல் ஆய்வாளர். கலைவாணி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும
ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார்,கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி, முதல்வர் (பொறுப்பு) ரவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.