மதுரை பிப்ரவரி 8,
மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 31 வயதான மோகன் குமார் என்பவர் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி லெட்சுமி மற்றும் மகன், மகள் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ஆயுதப்படை பணியில் பராமரிப்புக்காக மரம் வெட்டும் போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த நான்காம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 11 மணியளவில் மோகன்குமார் மூளைச்சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்களும், மனைவியும் ஒப்புக்கொண்ட நிலையில் அன்னாரது உடலிலிருந்து தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்
சிறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகியவை மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கும்,
மற்றொரு சிறுநீரகம் திருச்சி தென்னுார் காவேரி மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும் உடல் உறுப்புதானம் பெற்றுக் கொண்ட மருத்துவமனைகள். அன்னாரின் உடல் உறுப்பு தானத்தால் எட்டு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பணியின்போது இயற்கை எய்திய மதுரை மாநகர ஆயுதப்படை காவலரின் இறுதி சடங்கில் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), மற்றும் காவல் உதவி ஆணையர்கள் அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.