ஊட்டி. ஜன. 12.
உறைபனி சீசன் துவங்கியதால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை உறைபனி குளிர் வாட்டி எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை உறை பனி காலமாகும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். புல்வெளிகள், புல் மைதானங்கள், பள்ளத்தாக்குகளில் இரவு நேரங்களில் கொட்டும் பனி பார்ப்பதற்கு உப்பை வாரி இறைத்தார் போல் காஷ்மீரை போல காட்சியளிக்கிறது. நவம்பர் மாதத்தில் துவங்க வேண்டிய உறைபனி பொழிவு தள்ளி போய் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியுள்ளது அதன் பின் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டது இதனால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்த சூழலில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது கடந்த இரு நாட்களாக உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாலை முதல் அதிகாலை வரை நிலவும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது நிலவும் கடுமையான உறைபனியால் தேயிலை செடிகள், காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு செடி மற்றும் மேரக்காய் கொடிகள் காய்ந்து விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதால் விவசாயிகளும் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால் வனப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி புல் மைதானங்கள், காய்ந்து கருகி விடுவதால் பல பகுதிகளில் தீப்பற்றி வன தீ உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறை எச்சரித்துள்ளது. காலை நேரங்களில் காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி கோத்தகிரி பகுதிகள் பள்ளத்தாக்கு மற்றும் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.