சென்னை ஆகஸ்ட் .09
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 10-வது தேசிய கைத்தறி நாள் சென்னை, எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்ரமணியன், பி.கே. சேகர் பாபு ஆகியோர் கைத்தறி துறையின் மூன்றாண்டு சாதனைகள் புத்தகத்தினை வெளியிட்டார்கள்.
2023-2024ஆம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட இரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை கௌரவிக்கும் வகையில், 20 கைத்தறி இரகங்களில், இரகத்திற்கு தலா 3 விருதாளர்கள் வீதம் 60 விருதாளர்களுக்கு ரூ.4.இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலாரூ. 4 இலட்சம் ரூபாய் வீதம் 20 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 பயளாளிகளுக்கு மாதம் ரூ.1200/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள்,நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் காலஞ்சென்ற நெசவாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1200/- வீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.15:25 இலட்சம் மதிப்பில் கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும், குழும வளர்ச்சித் திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 23 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பில் தறி உபகரணங்கள், குழும வளர்ச்சி திட்டத்தின்கீழ் 16 கைத்தறி குழும வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 7 கைத்தறி வடிவமைப்பாளர்களுக்கு மாத சம்பளம் 30,000/- வீதம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.