தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்
13,604 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு,
1,59,929 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,633.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மகளிர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரிய திட்டங்களினாலும், செயல்பாடுகளினாலும் தமிழகம் அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சியானது மகளிருடைய வாழ்க்கையில் தரமான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:-
ஏழைகள் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல், விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல், சமுதாயம் சார்ந்த நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் சமூக மேம்பாடு அடையச் செய்தல், சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அரசுத்துறைகள் மூலம் கிடைக்க பெறும் பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை ஒருங்கிணைத்து திறம்பட பயன்படுத்திட வழிவகை செய்தல், கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:-
சுய வேலைவாய்ப்பு திட்டம் (தனிநபர்) (SEP-I): வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தனிநபர்கள் தொழில் தொடங்கிட மற்றும் சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த வங்கிகளில் இருந்து ஒரு நபருக்கு குறைந்தது ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. வங்கிகளில் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
சுய வேலைவாய்ப்பு திட்டம் (குழு) (SEP-G): இத்திட்டத்தின் மூலம் ஆர்வமுள்ள ஏழை, எளிய மக்கள் குழுக்களாக தொழில் தொடங்கிட மற்றும் வங்கிகளிலிருந்து ஒரு குழுவிற்கு குறைந்தது ரூ.1.50 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 972 குழுக்களில் 11,455 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 649 குழுக்களில் 7,649 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 762 குழுக்களில் 8,980 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 497 குழுக்களில் 5,857 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 482 குழுக்களில் 5,681 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1,121 குழுக்களில் 13,211 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 622 குழுக்களில் 7,331 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 877 குழுக்களில் 10,336 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 674 குழுக்களில் 7,943 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 604 குழுக்களில் 7,118 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 635 குழுக்களில் 7,484 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 582 குழுக்களில் 6,859 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 527 குழுக்களில் 6,211 உறுப்பினர்களும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 636 குழுக்களில் 7,496 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9,640 குழுக்களில் 1,13,611 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திண்டுக்கல் மாநகராட்சியில் 1,598 குழுக்களில் 18,672 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 197 குழுக்களில் 2,302 உறுப்பினர்களும், கொடைக்கானல் நகராட்சியில் 311 குழுக்களில் 3,634 உறுப்பினர்களும், பழனி நகராட்சியில் 388 குழுக்களில் 4,534 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல் 23 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1,470 குழுக்களில் 17,176 உறுப்பினர்கள் உள்ளனர். ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் ஊரக பகுதிகளில் 9,640 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் என மொத்தம் 13,604 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,59,929 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 52,660 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2,807.05 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 8,673 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.479.62 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
2021-25 ஆம் ஆண்டில் 919 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.15.2 கோடி சுழல் நிதி, 3,242 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.346.5 கோடி சமுதாய முதலீட்டு நிதி, 99 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2.275 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி வழங்கப்பட்டது.
2021-25 ஆம் ஆண்டிற்கு 13 கல்லூரி சந்தை படுத்துதல் நடைபெற்று, 403 சுய உதவிக்குழுக்களை பங்கேற்க செய்து, ரூ.2.21 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-25 ஆம் ஆண்டில் இதுவரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.3,633.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த யூஜின் மரகோ இருதயராஜ் என்பவர் மனைவி கிறிஸ்டி குழந்தை தெரசா(வயது 35) தெரிவித்ததாவது:-
எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். ஒருவரின் வருமானம் குடும்ப செலவிற்கும், குழந்தைகளின் கல்வி செலவுக்கும் போதுமானதாக இல்லாத சுழ்நிலையில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தோம். அப்போதுதான், எங்கள் பகுதியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் வழியாக எங்கள் குடும்பத்தின் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இலக்கு மக்கள் பட்டியலில் இணைத்து என்னை சுய உதவி குழுவில் உறுப்பினராக இணைத்தனர். நான் 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். குழுவில் கிடைத்த அனுபவங்கள், பயிற்சிகள், வழிகாட்டுதல் அனைத்தும் எனக்குள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியது. அது, நான் சுயதொழில் தொடங்க எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. குழுவில் மாதம்தோறும் சேமித்த தொகையை கொண்டு சுயமாக தொழில் ஒன்றை தொடங்கி நாமும் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாகியது.
சுயமாக தொழில் தொடங்குவதற்காக குழுவில் உள்கடனாக ரூ.20,000 பெற்று சொந்த நிதி ரூ.30,000 கொண்டு ஒரு மளிகை கடை ஆரம்பித்தேன். புதிய தொழில் என்பதால் ஆரம்பத்தில் வியாபாரத்தில் நுணுக்கம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை முறையாக கையாளவில்லை. எனவே தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில், எனது தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல எனக்கு முறையான தொழில் திறன் பயிற்சி தேவைப்பட்டது. அப்போது சமுதாய வள பயிற்றுநர் (தொழில் மேம்பாடு) வழிகாட்டுதலில் வட்டார வணிக வளமையத்தில் 5 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
மேலும் தொழிலை விரிவுபடுத்த சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.50,000 எனக்கு வழங்கப்பட்டது. அதை வைத்து இப்போது எங்களின் தொழிலை விரிவுபடுத்தி அதிகமாக விற்பனை செய்து, எனது வருமானத்தை அதிகபடுத்தியுள்ளேன். இதனால் எனது குடும்ப சூழ்நிலையும், வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.
எங்களை போன்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.
இதுகுறித்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சின்ன பொன்னிமாந்துரை கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் கபிரியேல் என்பவர் மனைவி சோபியா தனசீலி(வயது 38) தெரிவித்ததாவது:-
நான் சின்ன பொன்னிமாந்துரை கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். அவருடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாத சுழ்நிலையில் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில், எங்கள் பகுதியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் வழியாக சுய உதவி குழுவில் உறுப்பினராக இணைந்தேன். குழுவில் மாதம்தோறும் சேமித்த தொகையை கொண்டு சுயமாக தொழில் ஒன்றை தொடங்கி நானும் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாகியது. நான் முதுகலை பட்டதாரி. குழுவில் கிடைத்த அனுபவங்கள் பயிற்சிகள் வழிகாட்டுதல் அனைத்தும் எனக்குள் தைரியத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது.
சுயமாக தொழில் தொடங்குவதற்காக குழுவில் உள்கடனாக ரூ.30,000 பெற்று சொந்த நிதி ரூ.30,000 கொண்டு ஒரு ஜெராக்ஸ் கடை ஆரம்பித்தேன். எனது தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல எனக்கு முறையான தொழில் திறன் பயிற்சி தேவைப்பட்டது. அப்போது சமுதாய வள பயிற்றுநர் (தொழில் மேம்பாடு) வழிகாட்டுதலில் வட்டார வணிக வளமையத்தில் 5 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். மேலும் தொழிலை விரிவுபடுத்த சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.50,000 வழங்கப்பட்டது. அதை வைத்து இப்போது எங்களின் தொழிலை விரிவுபடுத்தி எனது வருமானத்தை அதிகபடுத்தியுள்ளேன். இதனால் எனது குடும்ப சூழ்நிலையும், வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.
எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இதுபோன்ற கடனுதவிகள் வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது, என்றால் அது மிகையாகாது.
வெளியீடு
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.