நாகர்கோவில் – செப்- 05
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இச்சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்காக செல்ல முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்கள், இப்பகுதியில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க வருபவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் பேருந்தில் பயணம் செய்வதற்காக அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அது போன்று இந்த வழிப்பாதையில் தான் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் 108 வாகனங்கள் சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பகுதியில் அரசு அதிகாரிகளே தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் சாவகாசமாக வந்து சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கி விட்டு சாவகாசமாக வருகின்றனர். இவர்களின் வாகனம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த வாகனத்தை கடந்து செல்ல வேண்டுமென்றால் சாலையின் நடுவில் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை. அரசு அதிகாரிகள் சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதால் பொதுமக்கள் சாலை வழியாக செல்லும் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்றால் யார் பொறுப்பேற்பார். பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே சாலை விதிகளை பின்பற்றாமல் அரசு அதிகாரி என்கின்ற ஆணவத்தில் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. பொது மக்களுக்கு ஒரு நீதி அரசு அதிகாரிகளுக்கு ஒரு நீதியா? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.