குளச்சல், ஜன-18
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஹட்சன் அலெக்ஸ் (51). இவரின் விசைப்படகில் 15 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஐந்து பேர் வட மாநில தொழிலாளர்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஒடிசாவை சேர்ந்த சிவா (30) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.
இன்று அதிகாலை தொழிலுக்கு விசைப்படகில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். சிவா விசைப்படகில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவா உடன் வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்கள் வந்து அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜின் (25) என்பவர் சிவாவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
ரத்த வெள்ளத்தில் கடந்த சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது தலைமறைவான அஜினை 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். விசாரணையில் அஜின் செல்போனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை எனவும், இதை சிவாதான் எடுத்துள்ளதாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குள் தகராறு நடந்து வந்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது