தென்காசி. நவ.21
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 17 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தென்காசி ஆயுதப்படையில் வைக்கப்பட்டுள்ளது அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, காவலர்களுக்கு மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பான முறையில் எவ்வாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இடரிலுள்ள மக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்