நாகர்கோவில் நவ 28
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023 ம் ஆண்டிற்கான 3359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 97 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு 27.11.2024 ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறையில் பணியாற்றுவது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு உன்னதமான பணியாகும், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் சிறப்பாக பணியாற்ற வேண்டும், சைபர் குற்றங்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், பயிற்சியை நல்லமுறையில் முடித்து சிறந்த காவலராக திகழவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட 97 காவலர்கள் வரும் 04.12.2024 அன்று காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்கு செல்ல உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.