நாகர்கோவில் ஜூன் 16
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முளவிளை பூவன்கோடு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் பரமசிவன் தொழில் அதிபர் ஆவார். பரமசிவன் பூவன்கோடு சந்திப்பில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நகை கடைக்கு கடந்த ஜூன் 10-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் புதுமணத்தம்பதியாக ஒரு ஆணும், பெண்ணும் நகை கடைக்கு வந்துள்ளனர்.
புதுமணத்தம்பதி தங்களுக்கு 4 கிராம் மோதிரம் வேண்டும். அதில் விதவிதமான மாடலை காட்டுங்கள் என கூறியுள்ளார்கள். அரை மணி நேரமாக ஒவ்வொரு மாடலையும் புரட்டி, புரட்டி பார்த்த இருவரும் திருப்தி இல்லை என கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர்.அன்று இரவு நகை கடை உரிமையாளர் பரமசிவன் கடையை பூட்டும்போது நகைகள் மற்றும் மோதிரத்தை கணக்கெடுத்தார். அப்போது 2 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 மோதிரங்களை புதுமணத்தம்பதி எடுத்துச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஆண், பெண்ணின் உருவம் தெளிவாக தெரியாத நிலை இருந்தது. எனினும் அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது ஆணும், பெண்ணும் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் தெளிவாக தெரிந்தது.இந்தநிலையில் கடந்த 13ம் தேதி திருவட்டார் போலீசார் சுவாமியார் மடத்தில் சோதனையில் ஈடுபட்ட போது பரமசிவன் நகை கடையில் திருடிய திருவிதாங்கோடு கேரளபுரத்தைச் சேர்ந்த இர்ஷாத் (23), அவரது மனைவி அனிஷா என்ற இர்பானா (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் புதுமண தம்பதி என்பது தெரியவந்தது. அவர்கள் நகை கடையில் இருந்து எடுத்த 2 மோதிரமும் மீட்கப்பட்டது.
பின்னர் கைதான இர்ஷாத் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது கூறிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். இர்ஷாத்தின் சொந்த ஊர் திருவிதாங்கோடு ஆலடிகுன்று காலனியாகும். இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்காமல் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும், கஞ்சா புகைக்கும் பழக்கமும் உண்டாம்.கடந்த வருடம் திங்கள்சந்தை பஸ்நிலையம் அருகே அனிஷா என்பவரை இர்ஷாத் பார்த்துள்ளார். அவரை பார்த்த உடன் பிடித்துள்ளது. இதனால் அவரை திருமணம் செய்ய விரும்பி உள்ளார். அவரிடம் பேசி பழகி, காதலித்துள்ளார். அப்போது அனிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதை அறிந்துள்ளார் இர்ஷாத். எனினும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். பிறகு அனிஷாவின் பெயரை இர்பானாவாக மாற்றி 7 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அவரது மனைவி இர்பானாவுக்கு எப்போதும் பணம் கையில் இருக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. தன் மனைவியின் குணமும், தன்னை போலவே இருப்பதை கண்ட இர்ஷாத் அவருக்காக செய்த செயல் தான் தறபோது கைது வரை கொண்டு சென்றுள்ளது. பணத் தேவைக்காக திருடலாம் என்று முடிவு செய்து, மனைவியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். அதற்காக இருவரும் கடந்த மே மாதம் 24-ந் தேதி கருங்கலில் உள்ள நகை கடைக்கு சென்றுள்ளார்கள்.அங்கு நகை கடையின் வெளியே இர்ஷாத் நின்றுள்ளார். இர்பானா மட்டும் உள்ளே சென்று நகைகள் வாங்குவது போல் நடித்து 2 மோதிரத்தை நைசாக திருடி உள்ளார். இந்த சம்பவத்தில் இருவரும் சிக்கவில்லை. பிறகு இதேபோல் பூவன்கோட்டில் உள்ள நகைகடையிலும் திருடி உள்ளார்கள். ஆனால் இந்த முறை கண்காணிப்பு கேமரா காட்சியால் போலீசில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.