சங்கரன்கோவில். டிச.11.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மலையன்குளம் கிராமத்தில் உள்ள 110 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் குருவிகுளம் பகுதி மேலநீலித நல்லூர் ஒன்றிய கிழக்குப் பகுதி, சங்கரன்கோவில் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 40,000 மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் அதிக மின்பளு ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது எனவும், எனவே குருவிகுளம் பகுதியை மையமாகக் கொண்டு சுமார் 18000 மின் இணைப்புதாரர்கள் பயன்பெறும் வகையில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர் ராஜா கூறியதை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் தேவைப்பட்டால் வரும் ஆண்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , தற்போது தமிழகத்தில் 393 துணை மின் நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் 49 துணை மின் நிலையங்களுக்கு மட்டும் நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.