அரியலூர், அக்;29
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சியில் போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழு) லிட், கடலூர் மண்டலத்தின் சார்பில் முள்ளுக்குறிச்சி – சென்னை புதிய வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நேறறையதினம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சியில், முள்ளுக்குறிச்சி – சென்னை புதிய வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி தடம் எண் 171 வழித்தடத்தின் மூலம் முள்ளுக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு பாசிகுளம், விருத்தாசலம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, தீபாவளி பயணங்களை பொருத்த வரையில் கடந்த ஆண்டு 1,10,000 முன்பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் நேற்றையதினம் வரையில் (28.10.2024) 1,42,000 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவினை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. முன்பதிவில்லாமல் பயணம் செய்யகூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்ககூடும் என்பதால் அதற்கேற்ப வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் சுமார் 1,10,750 நபர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்றும் நாளையும் சேர்த்து சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் ஏற்கனவே சோதனை முறையில் தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கப்பட்டது. தேவைக்கேற்ப தனியார் ஒப்பந்த பேருந்துகள் அரசு கட்டணத்திலேயே அரசு வழங்குகின்ற பயணசீட்டு கொடுக்கப்பட்டு அரசு நடத்துநர் அந்த வாகனத்தில் பயணிப்பார். அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரோடு அவை இயக்கப்படும். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது முன்பதிவு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அதற்கேற்ப உயர்த்தப்படும். தனியார் பேருந்துகள் ரெட் பஸ் செயலி மூலமாக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளிடமிருந்து புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அது பயணிகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதுடன் தொடர்புடைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயலிகள் மூலம் விற்பனை செய்யப்படும் பயணசீட்டுகள் தொடர்பான புகார் வரப்பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழு) லிட், விழுப்புரம் மேலாண் இயக்குநர் குணசேகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழு) லிட், கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்