நாகர்கோவில் டிசம்பர் 24
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் நிலைய பதிவேடுகள், அரசு சொத்துக்கள், வழக்கு கோப்புகள், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள். மேலும் காவல் நிலைய வளாகத்தில் அமைந்திருக்கும் காவலர் குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலைய பதிவேடுகள், அரசு சொத்துக்கள்,வழக்கு கோப்புகள் சம்பந்தமாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். காவல் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், புகார் அளிக்க வரும் பொதுமக்களுடன் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து காவல் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட போது, காவலர்களின் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் காவலர் குடியிருப்பில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதனை உடனடியாக ஏற்படுத்தித் தரவும், காவலர் குடியிருப்பில் ஏழு நாட்களுக்குள் CCTV கேமரா பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவலர் குடியிருப்பு சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், நேசமணிநேர காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிதுரை ஆகியோர் உடனிருந்தார்கள்.