ஊட்டி. மார். 02.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உதகை அருகேயுள்ள வானிலை அறிவிப்பு நிலையத்தில்
அறிவியல் சார்ந்த பரவலாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியாக நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறிய கருத்துக்களாவன –
உலக விஞ்ஞானிகளை போல நமது இந்திய விஞ்ஞானிகளும் பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர். வானியல் துறையில் டாக்டர் சந்திரசேகரன், மரபணு தொழில்நுட்பத்தில் டாக்டர் ஹர்கோபிந்சிங் கொரோனா, போன்ற பல அறிஞர்கள் நோபல் பரிசுகளை பெற்றுள்ளனர். ரேடியோவை கண்டுபிடித்த ஜெகதீஸ் சந்திரபோஸ், ஐன்ஸ்டீனின் புள்ளியியல் தேற்றத்தை கண்டுபிடித்த சத்தியேந்திரநாத் போஸ், பிரபஞ்சவியலில் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மேகநாத் சாகா போன்ற பல விஞ்ஞானிகளுக்கு அவர்கள் இந்தியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நோபல் பரிசு மறுக்கப்பட்டது. அதேபோல பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு பெருமளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. பார்வதி அம்மாள் என்ற விஞ்ஞானி இந்தியாவின் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமைக்குரியவர். இன்று நம் நாட்டில் விளையும் கரும்பு பார்வதி அம்மாளின் கொடை ஆகும். புகழ்பெற்ற நாக்பூர் ஆரஞ்சு ஒரு பெண் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. அண்மையில் சந்திராயன் 2 செயற்கை கோளுக்கு பின்புலமாக இருந்த பெண் விஞ்ஞானிகள் பெயர்கள் வெளியே தெரியாமல் போனது வருந்தத்தக்கது. இன்றைய சூழலில் அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது. கல்வியின் அடிப்படை நோக்கமே பணம் சம்பாதிப்பது தான் என்ற நிலை தற்போது உள்ளது வருந்துத்தக்கது. சீனாவில் ஆறாம் வகுப்பிலேயே அறிவில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை விஞ்ஞானிகளாக்கி இன்று உலகில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு இல்லாமல் எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் வராது. நமது நாட்டில் 80 சதவீத விஞ்ஞானிகள் ராணுவ ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இளைய சமுதாயத்தினர் இந்த நிலை மாற சமூக மாற்றத்திற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். இளம் விஞ்ஞானி ஜனார்த்தனன் நஞ்சுண்டன் நேஷனல் ஜியோகிராபி நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்டவர், நாசாவின் மக்கள் விஞ்ஞானி யாக செயல்படுகிறார். காலநிலை மாற்றத்தினால் நமது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிட்டு நாசாவின் செயற்கைக்கோளுக்கு தினமும் தகவல் அனுப்பி வைப்பவர், அவர் தமது விஞ்ஞான செயல்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார். தம்மைப் போல ஒவ்வொரு மாணவரும் அமைச்சூர் விஞ்ஞானியாக செயல்படலாம். இதுபோல வானியல் துறையிலும் மாணவர்கள் வலைதளங்களில் ஸ்கை ஜு என்ற ஆப்பினை டவுன்லோட் செய்து ஆய்வு மேற்கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கலாம் என்பன போன்ற பல செய்திகளை கூறினார்