நாகர்கோவில் அக் 14
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை செப்பனிடும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும், ஒப்பந்தக்காரர் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து, இதில் பயணம் செய்வதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு. தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி சென்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தேசிய நெடுஞ்சாலையின் அவலத்தை எடுத்துரைத்தேன். இந்த சாலையை செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
ஆகவே எனது கோரிக்கைக்கு ஏற்ப ரூபாய் 14.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டது. அதன் பின்னர் பல்வேறு தடங்கல்களை கடந்து தற்பொழுது இந்த பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தகாரர் விரைவில் முடிவு செய்யப்பட்டு இந்த சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என பொது மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது என்பதை நன்கறிவோம். இதில் பயணம் செய்யும் போது மக்களின் சிரமங்களையும் உங்களில் ஒருவனாக புரிந்து கொள்கிறேன். மிக விரைவில் பணிகள் நிறைவு பெற்று இந்த சாலை தரம் மிகுந்த ஒன்றாக மாறும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.