மார்த்தாண்டம், ஜன- 29
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (59). திமுக பிரமுகரான இவர் நட்டாலம் அளவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் (70). திருமண புரோக்கர். இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இடவிளாகம் அங்கன்வாடி மையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ராஜகுமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ் திடீரென வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் ராஜகுமாரன் மார்பில் ஓங்கி அடித்துள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் இடது முழங்காலில் ஓங்கி அடித்தாராம்.
இதில் காயமடைந்த ராஜகுமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.