நாகர்கோவில் நவ 11
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு விபத்துகள் ஏற்படுத்தி வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இறைச்சகுளத்தில் இருந்து புத்தேரி வழியாக நான்கு வழிச்சாலை நோக்கி கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு மட்டும் ஒருவழி பாதையாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.அதாவது இறைச்சகுளத்தில் இருந்து துவரங்காடு, ஆரல்வாய்மொழி வழியாக கனரக வாகனங்கள் செல்ல வேண்டும்.
இந்நிலையில் நேற்று நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் புத்தேரி பகுதியில் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது இறைச்சகுளத்தில் இருந்து புத்தேரி நோக்கி சமூகரங்கபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த கனிம வள கனரக வாகனம் விதி மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு ₹5000/_ அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.