நாகர்கோவில் பிப் 18
நாகர்கோவில் மாநகராட்சி 4 வது வார்டு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-
நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டு பெருவிளை பகுதியில் 2003-ம் ஆண்டு துணை சுகாதார நிலையம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அதில் ஒரு செவிலியரும் பணியாற்றி வந்தார். ஆனால் 2018ல் இருந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாடின்றி மூடப்பட்டது. இது சம்மந்தமாக ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை திறக்கப்படாமல் பூச்சி பாம்புகளுக்கு வசிப்பிடமாகவே இருந்து வருகிறது. எனவே அந்த துணை சுகாதார மையத்தை மீண்டும் புதுபித்து மக்களின் தேவையை உணர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டு சார்பாக கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.