கிருஷ்ணகிரி:ஜூலை:25, கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் இயங்கி வரும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இசைத் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.பிரமிளா தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர் கே.சித்ரா வழிகாட்டுதலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த. தனராசு “தமிழரின் இசை மாண்புகள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில்: தமிழர் தோன்றிய போதே இசையும் உருவானது. இயற்கையோடு உயிராக நின்றது இசை. இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் இசையைக் கொண்டே உருவாகி உள்ளது. இலக்கியங்களும், இலக்கணங்களும் இசையின் கூறுகளாக அமைகின்றன. தமிழரின் மாண்புகளை எடுத்துரைக்கும் பெரும் பங்கு வகிப்பது இசைதான் . சங்க காலம் தொடங்கி இன்று வரை என்றும் நிலைத்திருப்பது இசைதான். இலக்கியங்களின் ஒரு அங்கமாக பக்தி இலக்கியமாக இருந்தாலும் அதன் ஊடாக ஊடுருவி இருப்பது இசையாக மட்டுமே இருக்க முடியும். இசைக்காக பல்வேறு புலவர்களும், இசை பண்டிதர்களும் போராடி உலக அளவில் தமிழ் மொழியையும் இசையையும் கொண்டு சென்றுள்ளனர். இசை பாதுகாக்கப்பட வேண்டும். இசை களஞ்சியம் உருவாக்கப்பட்டு இன்றைய தலைமுறையினர் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்நிகழ்வினை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.முருகநாதன் ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இருபால் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் செ.ரஜினி மாணவியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் இறுதியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம.பழனி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வானது மாணவியர்களின் நாட்டுப்பண்ணுடன் முடித்தனர்.