திருவட்டார் : மார் 7
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இந்த பாலம் 115 அடி உயரமும் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்ட ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் ஆகும். இந்த தொட்டி பாலத்தை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தொட்டி பாலத்தின் மேல் பகுதியில் நடந்த செல்வது திகில் அனுபவமாகும்.
. இந்த நிலையில் கடந்த மாதத்தில் நுழைவாயில் அருகில் இருந்த காமராஜர் உருவம் பதிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டி பாலத்தின் அடிப்பகுதியில் மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இந்த தேனீக்கள் பாலத்தின் மேல் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை துரத்தி கொட்டிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மலைத்தேனீ என்பதால் அளவில் பெரியதாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டப்படுகிறது. மேலும் தொட்டி பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்லும்போது ஆங்காங்கே கசிவு ஏற்பட்டுள்ளது. அதையும் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.