குலசேகரம், செப்-18
குலசேகரம் அருகே அம்பலத்தறை பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி விலாசினி (68). அதே பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். டிரைவராக வேலை பார்க்கிறார். விலாசினியின் மூத்த மகளை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணன் தனது மாமியார் விலாசினியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருந்திக்கரை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். சாலையில் வேகமாக செல்லும்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்ததில் விலாசினிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோபாலகிருஷ்ணனும் காயமடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக அஜாக்கிரதையாக பைக்கை அதிவேகத்தில் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக விலாசினி தனது மருமகன் கோபாலகிருஷ்ணன் மீது குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கோபாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் குறுக்கே பாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் பைக்கில் அழைத்து சென்றது குற்றமா? என்று கேட்கும் வகையில் கோபாலகிருஷ்ணனின் நிலை உள்ளது என கமென்ட் எழுந்துள்ளது.