சீர்காழி அருகே கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட விவகாரம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் கேட்காத மற்றும் பார்க்காத சம்பவங்களை ஒப்புக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக 300க்கு மேற்பட்டோர் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அன்று சென்னையில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அல்பாசித்துடன் வாட்ஸ்ஆப் குழுவில் தொடர்பில் இருந்ததாக திருமுல்லைவாசல் பகுதியில் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து மேற்படி 15 நபர்களும் குறிப்பிட தினத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்தனர். இதுவரை 27 நபர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளதாகவும் இதில் சிலர் சிறுவர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 15, 16 17 ஆகிய மூன்று தினங்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான சிலரிடம் அவர்களுக்கு தொடர்பில்லாத சம்பவங்களை கேட்டதாகவும், பார்த்ததாகவும் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு வர முடியாத நபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயல்படுவதால் சகோதரர்களாக வாழ்ந்து வரும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தையும் பிரிவினையும் உருவாக்க முயல்கிறார்கள்.இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மேற்படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அதே நேரம் தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.