ஆரல்வாய்மொழி மார்ச் 05
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்களும், மோசடி சீர்கேடுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் திரைப்படம் காண்பிப்பதாக கூறி, அரசு அலுவலக முத்திரைகளை போலியாக தயாரித்து பயன்படுத்தியும், மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிக்கூடங்களில் பண மோசடி செய்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறை தாமதிப்பது ஏன்? குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட ஆசியர் பரிந்துரை செய்யாமல் அரசாங்கத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக கடிதம் தாயார் செய்து விட்டு, மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தையும் போலியாக இட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அரசு முத்திரைகளையும் போலியாக தயாரித்து அரசை தவறாக பயன்படுத்தியது மட்டுமின்றி, பணம் சம்பாதிக்கும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவியரிடம் ரூ. 10 கட்டணம் வசூலித்து ஏமாற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், இதுபோன்ற போலியான நபர்கள் குற்றம் புரிவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
27-ம் தேதி நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் இப்புகார் மனு பெறப்பட்டுள்ளதாக ஒப்புதல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை காவல்துறை இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. இதுகுறித்து காவல்துறையிடம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விசாரித்தாரா? மேலும் நடந்தவை குறித்து செய்தித்துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாளர் மற்றும் இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்களுடைய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டதா? இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நேரில் சந்தித்து பேசி நடவடிக்கை எடுக்க சொன்னாரா? குமரி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும் என கருதுகிறேன். கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ செல்வங்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இச்செயலை தடுப்பதற்கு பாரபட்சமின்றி அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
முக்கியமான இச்சம்பவத்தில் நாட்கள் பல கடந்தும் வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நடவடிக்கைகளை கைவிடுமாறு இருக்க எதாவது அழுத்தம் தரப்படுகிறதா? அரசியல் தலையீடுகள் இருக்கிறதா? ஏன்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதோடு, இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நம் மாவட்டத்தில் நடைபெறாமல் இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.