மார்த்தாண்டம், ஏப்- 17-
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனயம் புத்தன் துறை ஊராட்சி பகுதியான இனயம் சின்னத்துறை மற்றும் ராமன் துறை மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் கடலில் போடப்பட்ட பெரிய பாறை கற்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் இனயம் சின்னத்துறையில் உள்ள பெரியநாயகி குருசடி மற்றும் ராமன் துறை மீனவ கிராமத்தில் கிழக்குப் பக்கம் செல்லும் சாலை, வீடுகள் போன்றவை கடலில் அடித்து செல்லும் நிலையில் காணப்படுகிறது.
எனவே மேற்கண்ட மீனவ கிராமங்களில் சேதமடைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும். மேலும் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்து காணப்படும் சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.