ஈரோடு செப் 10
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு, கோணவாய்க்கால் மற்றும் மொடக்குறிச்சி, சாத்தம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை பேரூராட்சி பகுதிகளுக்கு, ஈரோடு காலிங்கராயன் பகுதி காவேரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு செல்லும் வகையில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டமானது நசியனூர், சித்தோடு, கே.சி.பாளையம், பெருந்துறை பேரூராட்சிகள் மற்றும் இறுதியாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 ஊரக குடியிருப்புகளுக்கு செல்கிறது. கோணவாய்க்கால் அருகே காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க இத்திட்டம் திட்டமிடப்பட்டு, ஆற்றங்கரையிலிருந்து இரண்டு நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் சேகரிக்கப்படுகிறது. கே.சி.பாளையம் நீருந்து நிலையத்திலிருந்து பெருந்துறை, கே.சி.பாளையம் சென்னிமலை பேரூராட்சிகள் மற்றும் வழியோர கிராம குடியிருப்புகளுக்கு தனித்தனி மின்மோட்டார்கள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னிமலை பகுதி கடைக்கோடியாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்குவது குறித்து தலைமை நீரேற்று நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பிறகு அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி, சாத்தம்பூர் பகுதியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் அமைந்துள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின், தலைமை நீரேற்று நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் கட்டுமானம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதல் கட்டத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்டமானது 91 சதவீதம் முடிவுற்று மீதம் உள்ள பணிகளை
விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய
துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு,
ஒட்டப்பாறை ஆகிய 3 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம்
பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
முன்னதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு
வழங்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ ஊர்தியின் சாவியை வழங்கினார்.
இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி
துணை மேயர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார்,
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்
மனிஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.