தென்காசி மாவட்டத்திற்குள் நுழைய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியைச் சார்ந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன் மற்றும் கணபதி ஆகியோரின் தலைமையில் மனு அளித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அளித்த பேட்டியின் போது ஓ. பன்னீர்செல்வம் வீட்டையே நேரில் வந்து முற்றுகையிட்டு அவர் எங்கும்
நடமாட முடியாத நிலையை தமிழகத்திலே அவர் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அவரது பேட்டி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில் பொதுவெளியில் அச்சுறுத்தல் விடுத்து இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் ஆர்பி. உதயகுமார் பேசி இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓ. பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் பேசி இருப்பது கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய நிர்வாகிகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் ஆர்பி உதயகுமார் தென்காசி மாவட்டத்திற்குள் வர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.