ஆம்பூர்,ஜூலை.31-
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அருகே சின்னவரிகம் ஊராட்சி பெங்களமூலை பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மண் திருட்டு நடப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆம்பூர் வனச்சரகத்தின், துருகம் காப்பு காடுகள், மிட்டாளம் வடக்கு பகுதியில் உள்ளது இந்த பெங்களமூலை பகுதி. சுற்றிலும் காப்பு காடுகள் நிறைந்த பகுதியான இங்கு கடந்த சில ஆண்டுகளாக யானைகள் வந்து போகும் பகுதியாகவும் உள்ளது. அதேபோல் மான்கள், காட்டு பன்றிகள் நடமாட்டமும் அதிக அளவில் இங்கு காணப்படுகிறது.
இந்த பெங்களமூலை பகுதியை ஒட்டி வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறம்போக்கு வகை நிலப் பகுதியிலும் , வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மண் கடத்துவதாக வனத்துறையினருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அப்போதைய மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர் ஆகியோர் அந்த இடத்தில் கனரக வாகனங்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி மண் கொள்ளையை தடுத்தனர். அதனால் அந்த பகுதியில் மண் திருட்டு நடக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மீண்டும் மண் கடத்துப்படுவதாக இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
யானைகள் நடமாட்டம் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சுமார் 20 அடி முதல் 30 அடி வரை ஆழம் வரை பள்ளம் தோண்டுவதால், இரவு நேரங்களில் யானைகள், மான்கள் போன்ற உயிரினங்கள் இந்தப் பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே வனத்துறையினர் வன உயிரினங்கள் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் தொடரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.