நாகர்கோவில் மார்ச் 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடதிலிருந்து டவுன் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் பள்ளி விளை அரிசி குடோன் எதிரில் உள்ள வாத்தியார் விளையில் ஒரு வீட்டில் காட்டில் இருந்து தப்பி வந்த கடமான்(மிளா) ஒன்று தஞ்சமடைந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட வாத்தியார் விளை பகுதியில் உள்ள வீட்டில் கடமான் ஒன்று (மிளா ) நேற்று அதிகாலை வீட்டின் மாடியில் ஏறி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாடி வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கதவை பூட்டிய படி உள்ளே இருந்தனர். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். மிளா ஒன்று வீட்டின் மாடியில் வந்து தஞ்சம் அடைந்து இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து மிளாவை அதிசயமாக பார்த்து புகைப்படம் எடுத்தும், சிலர் தூரத்தில் நின்று செல்பி எடுத்தும் சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் விரட்டியும் மிளா நகர வில்லை. மிளாவின் உடலில் காயங்களும் இருந்தன. உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காலை 8 மணி அளவில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் உத்தரவுப்படி பூதப்பாண்டி வனச் சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர்கள் அசோக், ஜான்மிலன், வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர்கள், பிரவீன், ராஜன், இந்திரன், மாசானமுத்து, தனீஸ் அடங்கிய குழுவினர்கள் மற்றும் நாகர்கோவில் பிரிவு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், அலுவலர்கள் இணைந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் மாடியில் நின்ற மிளா பின்னர் அங்கிருந்து தப்பி தெருவில் இறங்கி ஓடியது. வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கையில் வலையுடன் அதை விரட்டினர்.
பின்னர் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்த கடமானை மிகவும் போராடி மீட்டனர் , பின்பு வன கால்நடை மருத்துவர் மனோகரன் அடங்கிய குழுவினர்கள் கடமானின் உடலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அழித்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மிளாவை காட்டு பகுதிக்கு கொண்டு சென்று பொய்கை அணை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சுங்கான்கடை மற்றும் அதன் சுற்று வட்டார மலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மிளா உள்ளிட்டவை ஊருக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்தவர்களும் நிம்மதி அடைந்தனர்.