அரியலூர், ஆக;28
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்ற துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் செல்லதுரை அனைவரையும் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் ஆனந்தவள்ளி மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் அறிவியல் சார்ந்த செயல்முறை செயல்பாடுகளை செய்து காண்பித்தனர். நியூட்டனின் மூன்றாம் விதி புவி ஈர்ப்பு விசை செயல்பாடு நடனமாடும் மெழுகுவர்த்தி செயல்பாடு காகித ஹெலிகாப்டர் செயல்முறை விளக்கம் திண்மம் திரவம் வாயு நிலைகளில் வேறுபாடு ஸ்டார்ச் துகள்களின் மாற்றம் ஒரு செல் உயிரி ஈஸ்ட் காற்றில்லா சுவாசம் நொதித்தல் கணித புதிர்கள் ஆகியன மாணவர்களுடைய சிந்தனையை தூண்டும் வகையில் செய்து காட்டப்பட்டது. இவ்வாறான செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் வட்டார மாவட்ட மாநில அளவில் நடைபெறும் வானவில் கண்காட்சி அறிவியல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழக அரசால் வெளிநாடு கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என மாணவர்களிடம் தெளிவாக எடுத்து கூறப்பட்டது .
மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் ஜெயப்பிரியா பவானி கவிதா உமா கீர்த்தனா ஆகியோர் செயல்பட்டனர்.
ஆங்கில ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்