மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி.
இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ,மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், அமமுக மாவட்ட செயலாளர் பாரி வள்ளல், மதிமுக மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன் , மற்றும் பல்வேறு அமைப்பினர் 1000 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.